×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* சப்பாத்தி மாவு பிசையும்போது அதில் கால் பங்கு சோயா மாவைச் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்தால் புரதச்சத்து பன்மடங்கு கூடும். அதேபோல் அதில் ஒரு வாழைப்பழம், ஒரு தேக்கரண்டி தயிர், சிறிது நீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சூப்பர் சாஃப்டாக இருக்கும்.

* சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் மாவின் மேற்பரப்பு வறண்டு, கறுத்துப்போய் விடும். இதைத் தவிர்க்க மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் போதும்!

* கோதுமை, ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருடன் சேர்த்து ரவை நன்றாகக் கொதிக்கும்போது தேங்காய் பூ சேர்த்து, வெந்ததும் இறக்கி விட்டால் சுவை அருமையாக இருக்கும்.

* எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடும்போது ஏற்படும் காரலைத் தடுக்க, சிறிது உப்பைப் போட்டால் போதும்.

– எம்.ஏ.நிவேதா, திருச்சி.

*வடகத்தை வெறும் வாணலியில் வறுத்தபின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.

* ஓமப்பொடி செய்யும்பொழுது கடலை மாவு மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு, சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகாமலும் நன்றாக எடுக்க வரும்.

* தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுஎன்றிருக்கும்.

– கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

* தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல் பக்கமும் கீழ்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் சுலபமாகச் சுழன்று விடும்.

* குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகி விட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகி விடும்.

* கட்லெட் செய்ய ‘பிரெட் கிரம்ப்ஸ்’ கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்ஸியில் அரைத்து பயன்படுத்தலாம்.

* பச்சை கொத்துமல்லித் தழையை பச்சையாகவே துவையல் அரைக்கும்போது புளி போடுவதற்கு பதிலாக ஒரு துண்டு மாங்காயை போட்டு அரைத்தால் சுவையும், மணமும் அதிகமாகும்.

* மோர்க்குழம்பு வைக்கும்போது அரிநெல்லிக்காய்களை அரைத்துப்போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

– பா.கவிதா, சிதம்பரம்.

* கோடை காலங்களில் வற்றல் போடும்போது எந்த வற்றலாக இருந்தாலும் இரண்டு ஸ்பூன் கசகசாவை கலந்துவிட்டால் வற்றல் சுவையாக இருக்கும்.

* அப்பம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கெட்டித்தயிரை கலந்து செய்தால் அப்பத்தின் உட்புறம் நன்கு வெந்து மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

* ரசம் கொதித்து இறக்கும்போது தேங்காய் உடைக்கும்போது சேமித்த தண்ணீரை ஊற்றி இறக்கினால் ரசம் வாசமாக இருக்கும்.

– கே.ஆர்.வசந்தகுமாரி, சென்னை.

ஊறுகாய் டிப்ஸ்

*ஊறுகாய் போட எல்லா மேல் சாமான்களையும் தயார் செய்து வைத்துக்கொண்டு, ஊறுகாய் போடத் தொடங்க வேண்டும்.

* ஊறுகாய் போட வேண்டிய காயை நறுக்கிய உடனேயே உபயோகிக்க வேண்டும்.

* ஊறுகாயை ஈரப்பதமில்லாத பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்து மரக்கரண்டி கொண்டு கிளறி உபயோகிக்க நீண்டநாள் கெடாமல் இருக்கும்.

* ஊறுகாய் பாத்திரத்தை மூடியால் மூடினாலும் அதற்கு மேல் மெல்லிய துணி கொண்டு இறுக்கமாகக் கட்டி வைக்கவும்.

* ஆவக்காயை ஓடோடு பெரிய துண்டுகளாக உடைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.

* புளிப்பு மாங்காயில் ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் போட்டால்தான் அருமையாக இருக்கும்.

* ஊறுகாய்களுக்கு மேல் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

* எந்த வகை ஊறுகாய் போடுகிறோமோ அதன் சாறை ஊறுகாயில் ஊற்றி தயாரிக்க, சுவை அதிகரிக்கும்.

* எலுமிச்சை, நார்த்தை போன்ற சாறுள்ள பழங்களில் மெல்லிய தோல் உள்ள பழங்களாக தேர்ந்தெடுத்துப் போட, சாறு அதிகம் இருக்கும்.

*காஷ்மீரி மிளகாய்த்தூள் பயன்படுத்த ஊறுகாய் நல்ல சிவந்த நிறமாக இருக்கும்.

* ஊறுகாய் பழசானால் ஒருவித வாடை வரும். பெருங்காயத் தாளிப்பு செய்து, பச்சை நல்லெண்ணெய் ஊற்றிட ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகி விடும்.

* தொக்கு போடும்போது கொஞ்சம் இஞ்சிச்சாறு சேர்க்க சுவை அதிகரிக்கும்.

– மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

மாங்காய் ரசம்

தேவையானவை:
மாங்காய் துருவல் – அரை கப்,
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
தக்காளி சாறு – கால் கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காய தூள் – இரண்டு சிட்டிகை,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு,
எண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை: மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்து ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். மாங்காய் கரைசலில் தக்காளி சாறு, உப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, ரசக்கலவையில் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான மாங்காய் ரசம் தயார்.

– ஆர். யமுனா, காஞ்சிபுரம்.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!